Tuesday, January 15, 2013

மீண்டும் என் மானுட வீதியில்....

எழுதுகிறவன் என்ற முறையில்,தொடர்ந்து கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளில் சிறுகதைகள்,கட்டுரைகள்,புத்தக அறிமுகங்கள் இப்படி எழுதிக் கொண்டேதான் இருக்கிறேன்.இதுவரை பதினோரு புத்தகங்கள் வந்து விட்டன.அவற்றில் ஏழு மொழிபெயர்ப்பு நூல்கள்.ஆங்கில வழி தமிழில் இலக்கியம்,அரசியல்,சுயசரிதை,தத்துவம் என்று பல பொருள்கள் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் அவை.அவற்றில் ஒரு தொகுப்பு நூல் "மானுட வீதி".2007 ஆம் ஆண்டில் கவிஞர் யுகபாரதியின் இயற்கை வெளியீடு மூலம் கொண்டு வரப்பட்டது.எனக்கு மிகப் பிடித்தமான கட்டுரைகள் அவை.கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த நூலின் பல பிரதிகள் நண்பர்களுக்கு என்று வாங்கி கொடுத்துக் கொண்டிருந்தேன்.கையில் ஒரு பிரதி கூட இல்லாதிருந்தது.இன்று தற்செயலாக நண்பர் கண்ணன் மூலம் அவருக்கு நான் கொடுத்திருந்த பிரதி திரும்பக் கிடைத்தது.அதன் முன்னுரை இன்றும் பொருத்தமான ஒன்றாகவே இருக்கிறது :மொழிபெயர்ப்பு என்பது படைப்பாக்கச் செயலுக்கு சற்றே மாற்றுக் குறைவான ஒன்றென ஒரு கருது நிலவுகிறது.இதை யாரும் வெளிப்படையாக அறிவிப்பது இல்லையே தவிர,மொழி பெயர்ப்பாளர்களுக்குத் தரப்படும் "சமூக மதிப்பு","இடம்"_இந்த நிலத்தடி நீராய்ப் போய்க் கொண்டிருக்கிற மதிப்புக்குச் சான்றுகள் ஆகும்." என்று தொடங்கும் அந்த முன்னுரை,தமிழின் மொழி பெயர்ப்புப் பாரம்பரியம் பற்றி நான் அறிந்த விவரங்களைத் தருகிறது.பிறகு இதில் உள்ள கட்டுரைகள் பற்றியும்,அவை வெளியான இதழ்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.சிற்பி வல்சன் கொலேரியின் "நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி"என்ற அனுபவக் கண்ணோட்டம் இதில் உள்ளது.ஸ்பார்டகஸ் என்ற ரோமானிய அடிமைப் போராளி பற்றிய நூல் அறிமுகம்,மலையாள மொழிப் படைப்பாளிகள் எம்.டி.வாசுதேவன் நாயர் ,பவித்ரன்தீக்குநி  ஆகியோரின் நூல்கள் பற்றிய கட்டுரைகள் உள்ளன.ஆனந்த் பட்வரதன் எடுத்த ஆவணப் படங்கள் பற்றியும்,அவற்றை எடுக்கும் பொது அவர் சந்தித்த பிரச்சனைகள் பற்றியும் அவருடன் நேர்காணல் உள்ளது. ஏ.ஜி.எத்திராஜுலு மொழிபெயர்த்த நூல்கள்,அவரின் அனுபவங்கள் பற்றிய நேர்காணல் ,சஷி தேஷ்பாந்தே யின் கட்டுரை,நாராயன் சுர்வே  எழுப்பிய கலாசாரக் கேள்விகள் கட்டுரைகள் இப்படி எல்லாமே எழுதுகிறவர்களின் அனுபவப் பிழிவுகள் அடங்கியதொகுப்பு "மானுட வீதி".கியூபாவின் புரட்சிகர போராளி ஹோசே மார்த்தி பற்றி அமரந்தா எழுதிய நூல் அறிமுகம் கடைசிக் கட்டுரை."மனிதன் அசிங்கமானவன்;ஆனால் மானுடம் அழகானது "என்கிறார் அவர்.எவ்வளவு அழகான உண்மை!இந்தக் கட்டுரைகளில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறோம் என்ற நிறைவு இன்று மீள் வாசிப்பின் இறுதியில் கிடைத்தது.ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று திரும்பிப் பார்க்கும் சமயம் இது."உனது தியாக உள்ளத்தை முட்களால் நிரப்பினேன்.முட்களின்  இடையே மலர்கள் மலரும் என்பதை மறவாதே" என்று தன அம்மாவிற்கு மார்த்தி எழுதும் கடிதம் எவ்வளவு அர்த்தம் நிறைந்தது!இப்படியான பல நல்ல விசயங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்தது பற்றி ஒரு நியாயமான பெருமிதம் எழத்தான் செய்கிறது.       

No comments:

Post a Comment