Saturday, January 1, 2011

நாஞ்சில் நாடனின் படைப்புலகம்

இந்தப் பதிவுகளில் நாஞ்சில் நாடனின் நேர்காணல் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.திரு.பாஸ்கர் என்ற நண்பர் அந்த நேர்காணல் முழுவதையும் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டிருந்தார்.அந்த நேர்காணல் செம்மலர் இதழுக்காக எடுக்கப்பட்டது என்பதால் பொங்கல் மலர் வெளிவரும் முன்பாக அதை இங்கு பதிவு செய்யலாமா என்று தெரியவில்லை.எனினும் பொதுவாக நாஞ்சில் நாடன் படைப்புலகம் சார்ந்து சிலவற்றைப் பதிவு செய்யத் தோன்றுகிறது.    கடந்த முப்பத்தி எட்டு ஆண்டுகளாக எழுதி வரும் காத்திரமான படைப்பாளி அவர்.நாஞ்சில் நாட்டு வாழ்க்கை தான் அவரின் படைப்புலகின் பெரும்பாலான படைப்புகளின் பாடு பொருள்.எனினும் அவர் மும்பையில் வாழ்ந்த அனுபவங்கள் சார்ந்து "மிதவை"நாவல்,சில சிறுகதைகள் வந்துள்ளன.அவரின் முதல் சிறுகதை,"பிரசாதம்" தீபம் இதழில் வந்தது.நாஞ்சில் நாடன் ஒரு முறை வட இந்தியாவில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொது,அவர் தான் சாப்பிடுவர்க்காக வாங்கிய பார்சலைப் பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வழியில் நின்ற ரயில் நிலையத்தில் ஏறிய ஒரு முதியவர் ,"காமி காணார்" என்று உடல் நடுங்கப் பதட்டத்துடன் சொன்னாராம்.அவருக்குப் பசி என்று முகத்தில் இருந்தே தெரிந்து கொண்ட நாடன்,தன பார்சலில் இருந்த ரொட்டிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.பல நாட்கள் அந்தப் பெரியவரின் பதட்டமும்,பசியும்,ஆனால் "எனக்குப் பசிக்கிறது,கொஞ்சம் ரொட்டி கொடு"என்று யாசிக்கவோ,கெஞ்சவோ இல்லை என்ற ஆச்சரியமும் நாஞ்சில் நாடனின் மனதில் ஊறிக் கொண்டே இருந்திருக்கிறது."நாம் உண்போம்"என்பதுதான் அந்தப் பெரியவரின் "காமி காணார்" என்ற வார்த்தைகளின் பொருள் என்று அறிந்த இவர்,அந்தப் பெரியவருடைய நிலை என்ன,அவருக்கு குடும்பம் என்று ஒன்று இருக்குமா,இருந்தால் அவரின் மகன் அல்லது மகள் யாரும் அவரைக் கவனிக்கவில்லையா,அவர் அவ்வளவு பதத்ததுடன் அந்த ரயிலில் தனியே ஏன் வர வேண்டும் என்று பல விதமாக யோசித்துக் கொண்டே இருந்ததின் விளைவு "விரதம்"சிறுகதை.இப்படி அவரின் ஒவ்வொரு படைப்புமே நாம் அன்றாடம் காண்கிற வாழ்க்கையின் படப்பிடிப்புகல்தாம்.                                                                          கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக எழுதிக் கொண்டிருந்தும் தான் தடம் பதித்து விட்டவரா,இல்லை,தடம் தொலைத்து விட்டவரா என்று புரிபடுவது இல்லை என்கிறார் இவர்.நமக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை.தடம் ஒன்றை அழுத்தமாகப்பதித்தவர்   நாஞ்சில் நாடன் என்பதில்."என் தீவட்டி எப்போதும் என் மனதில்;கரங்களில் அல்ல.அது எரிக்கும்,வெளிச்சம் பாய்ச்சும்,என்னை அற்றுக் கருகிப் புகைந்தும் போகும்"                     என்பது இவரின் சுய மதிப்பீடு.                                                                "எழுத்து என்பது எனக்குத் தவம் அல்ல;வேள்வி அல்ல;பிரசவ வேதனை அல்ல;ஆத்மா சோதனையோ சத்திய சோதனையோ அல்ல;பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல;பெரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல;வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி;என் சுயத்தைத் தேடும் முயற்சி" என்று கூறும் நாஞ்சில் நாடனுக்கு இலக்கியத்தில் நவீன உத்திகளின் மீது பெரிய அளவுக்கு நம்பிக்கை இல்லை.என் படைப்புக்கு அது அவசியம் என்றால் அது தானாகவே என்னிடம் வந்து சேரும் என்கிறார்.வாழ்க்கையைப் படித்தால் போதும் என்பது இவரின் பாதை.ஐந்து நாவல்கள்,எட்டு சிறுகதை தொகுப்புகள்,இரு கவிதைத் தொகுப்புகள்,மூன்று கட்டுரைத் தொகுப்புகள்,என்று இவரின் படைப்புக்களத்தில் விளைச்சல் கணிசமான அளவுக்கு நிறைந்து இருக்கிறது.ஆனாலும் இன்னும் இவருக்கு இவரது நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்க்கை பற்றி சொல்லுவதற்கு ஏராளம் உண்டு.இவர் ஆனந்த விகடனில் எழுதிய "தீதும் நன்றும்" கட்டுரைகள் இவரின் சமூகப் பொறுப்புணர்ச்சியின் தீவிர வெளிப்பாடுகள்.குறிப்பாக பெண்கள் படிக்கும் பள்ளிகள்;கல்லூரிகள்,வேலை செய்யும் அலுவலகங்கள்,பயணிக்கும் பேருந்துகள் இவற்றில் எதிர் கொள்ளும் பிரச்னைகள்,கழிவறை இல்லாமல் அவர்கள் படும் அவஸ்தைகள் பற்றியெல்லாம் மிகத் தீவிர அக்கறையுடன் எழுதியது மாநிலம் முழுக்க பெரும் எதிர்வினைகளை எழுப்பியது.இந்தக் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்குத் தெரியும்,நாஞ்சில் நாடனின் பார்வை எவ்வளவு கூர்மையானது என்பது.இசையில் இவரின் ஆர்வம் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் உணவு வகைகள் சார்ந்து இவருக்கு இருக்கும் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் இவரின் எல்லாப் படைப்புகளிலும் மிகத் துலக்கமாகத் தெரிவதை படிப்பவர்கள் உணர முடியும்.                                      இவருக்கு சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது எவ்வளவு பொருத்தம் என்று வாசகர்கள் மகிழ்கிறார்கள். ஆனால் நாஞ்சில் நாடனுக்கு இந்த அங்கீகாரம் மிகவும் காலம் கடந்து கிடைத்ததே என்ற வலி மிக ஆழமாக இருக்கிறது.அந்த வழியை வெளிப்படுத்துவதில் இவருக்குத் தயக்கம் சிறிதும் இல்லை என்பது இவரின் மற்றுமொரு தனித்தன்மை.வாசிக்க வாசிக்க சுவை தரும் ராக ஆலாபனை ப்ன்றவை இவரின் படைப்புகள்...................!                                                                                  

No comments:

Post a Comment