Tuesday, January 18, 2011

வாசித்தாலும் தீராத வாழ்க்கை...!

 'கதையோ கவிதையோ எதுவுமே சமூகத்தின் விலைபொருள் என்ற வகையில்,வெறும் கூடு அல்ல.அதற்குள் ஒரு உயிர் ஒளிந்து கிடக்கிறது.அதை,அதன் உயிர்த் துடிப்பை வெளியே கொண்டு வருவதில்தான் கலைஞனின் கிரியேட்டிவிட்டி இருக்கிறது..." என்று சொல்கிறார் நாஞ்சில் நாடன்.எழுதுகிறவர்கள் சக மக்களின் வாழ்க்கையைப் படித்தால் போதும்,படைப்பு தானே வசமாகும் என்பதுவும் அவரின் அனுபவ உரைதான்.கடந்த முப்பத்தைந்து ஆண்டுக் கால எழுத்து மற்றும் வாசிப்பு அனுபவத்தில் இந்தக் கூற்று எவ்வளவு உண்மை என்பதை நானும் உணர்கிறேன்.ஆரம்பப் பள்ளிக்கூட நாட்களிலேயே வாசிப்பு என்பது எனக்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டு விட்டது.ஆசிரியர்கள்,அண்டை வீட்டார்,பிற்பாடு கமலவேலன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் எனப் பலரும் இந்த வாசிப்புச் சுகத்தை எனக்கு உணர்த்தியவர்கள்.ஆரம்ப நாட்களில் தினமணி நாளிதழை என் அப்பாவே தினமும் டீக்கடையில் வாங்கிப் போடுவதன் மூலம் அந்த நாளிதழில் வரும் செய்திகளை மட்டும் இன்றி ஏ.என்.சிவராமன் எழுதும் கட்டுரைகள்,தினமணி சுடர்  வார இணைப்பில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதும் கதைகள்,கவிதைகள்,தொடர் கட்டுரைகள் என்று ஏராளமான விசயங்களை வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார்.வாசிப்பில் இருந்து நான் எழுதுவது என்ற அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு கமலவேலன்,அவினாசி முருகேசன் போன்ற எழுத்தாளர்கள் உதவினார்கள்.உயர்நிலைப் பள்ளி நாட்களிலேயே தீபம் மஞ்சரி கலைமகள் செந்தமிழ் என்று பலரகமான இலக்கிய இதழ்களைப் படிக்கும் வாய்ப்பை பள்ளி நூலகமே ஏற்படுத்தித் தந்தது.கண்ணன் இதழும் அன்று என் போன்ற இளம் மாணவர்களைப் படிக்கவும்,எழுதவும் தூண்டிய பத்திரிகை.அன்று மத்தாப்பு இதழையும்,கிண்டல்,வீரசுதந்திரம் போன்ற இதழ்களையும் நடத்தியவரான 'விசிட்டர்'ஆனந்த் எனது முதல் சிறுகதையை எழுபதாம் ஆண்டு மே மாதம் மத்தாப்பில் வெளியிட்டார்.பின் அரும்பு,கண்ணன்,மின்னல்கொடி,தினமணி கதிர்,தீபம்,வான்மதி,கோமகள்,மாலை முரசு,தினமலர்,கணையாழி,கல்கி,என்று பல்வேறு இதழ்களிலும் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.பின் செம்மலரும் சிகரமும் என் எழுத்துப் பயணத்தின் படிக்கட்டுகள்.வாழ்க்கையின் சுவடுகளையும்,புத்தகங்களின் பக்கங்களையும் ஒன்றுக்கொன்று இணையாகவே வாசித்துக் கொண்டே நான் வளர்ந்தேன்....வளர்வேன்.!

1 comment: