Saturday, October 17, 2009

பசித்தவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம்...

இன்று தீபாவளி நாள். பட்டாசுகள் வெடித்து மக்கள் ஆனந்தமாகக் கொண்டாடும் நாள் இது. இது ஒருபுறம்.மறுபக்கம் ஒன்றும் இதற்கு இருக்கிறது.இன்று ஹிந்து நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தி நம் கவனத்தை கவராமல் இருந்தால் நமது மனிதத் தன்மை கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கும்.

உலக உணவு தினத்தை ஒட்டி ஒரு ஆய்வு அறிக்கை வந்துள்ளது. இன்னும் பில்லியன் கணக்கிலான மக்கள் ஒரு நாளைக்கு மிக எளிய,குறைந்தபட்சம்,ஒரு நேர உணவு கூடக் கிடைக்காமல் இருக்கிறார்கள் என்ற உண்மையை அந்த அறிக்கை சொல்கிறது. ஒவ்வொரு சில கன நேரத்திற்குள் ஒரு குழ்ந்தை உணவுப் பற்றாக்குறையால் இறந்து கொண்டிருக்கிறது. இது நம் மனதில் ஏற்ப்படுத்தும் உணர்வு என்ன/சில சின்னஞ்சிறு நாடுகள் கூட இந்த வறுமைக்கு எதிரான போரில் ஈடுபட்டு சில வெற்றிகளையும் அடைய முடிந்திருக்கும் போது நம் நாடு இந்தப்போரில் இருபத்து இரண்டாவது இடத்தில்தான் இருக்கிறது. இந்தச் சுடுகிற உண்மை நம்மில் எத்தனை பேரின் கவனத்தைக் கவரப் போகிறது?

ஒரு புறம் நாம் சந்திராயன் மூலம் நிலவில் நீர் இருக்கிற உண்மையை உலகுக்கே முதன் முதலில் சொன்ன பெருமையை அடைந்து விட்டோம். நமது நாடு வம்சாவளியைச் சேர்ந்த வெங்கட் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்று விட்டார். இன்னும் இது போல் பல பெருமைகள் நமக்கு உண்டுதான். சந்தேகமில்லாமல் இது ஒரு நாட்டின் மக்களின் அறிவு ஆற்றல்,புதியன படைக்கும்  திறன்கள் அனைத்திற்கும் சான்றுகள்தான். ஆனால் இது ஒரு ஓவியத்தின் பிரகாசமிக்க பகுதி மட்டுமே. விளக்கின் அடி இருட்டுப் போல மறு பக்கம் இருள் நிறைந்ததாயிருக்கிறது.

இன்று வந்துள்ள மற்றொரு கட்டுரை வேலை உறுதி வழங்கும் சட்டம் பற்றியது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த திட்டம் செயல்படும் விதம் பற்றி சமூகத் தணிக்கை செய்த அரசு சாரா நிறுவனங்களின் மதிப்பீடு என்ன என்று சொல்கிறது.இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வந்துள்ள ஒரு கட்டுரை சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை  பற்றியது. அங்கு வேலை செய்யும் தொழிலளர்கள் பெரும் கூலி வாரம் ஒன்றுக்கு ரூபாய் மூன்று ஆயிரம் என்றாலும் தீபாவளி முடிந்ததும் இரண்டு வாரம் வரை தொழிற்சாலைகள் மூடி கிடக்கும். அவர்கள் ஏற்கெனவே வாங்கிய கடன்களைத் தீர்க்கவே வாங்கும் சம்பளம் சரியாக இருக்கும். இந்த அம்சம் தவிர வேறு பல அம்சங்களும் இதில் இருப்பதை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன. இருபதுகள் வரை பருத்தி விளைவிக்கும் இடமாக இருந்த விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதி இப்போது பட்டாசுத் தொழில் மட்டுமே நடை பெரும் பகுதியாக ஆகி விட்ட துயரம் பற்றி நம் மனதில் என்ன அலைகளை எழுப்புகிறது. இன்று பண்டிகை நாள் என்பது தரும் மகிழ்ச்சியை விட இது போன்ற சமூக அவலங்கள் ஏற்ப்படுத்தும் துயரம் ஆழமானது. என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?

மகாகவி பாரதியின் இந்த வரிகள் இன்னமும் பொருந்துவதாகவே இருக்கின்றனவே?

No comments:

Post a Comment